சேலம் மாவட்டம் எடப்பாடி ஒன்றியம் சித்தூர் ஊராட்சிக்குட்பட்ட ரெட்டிபட்டி எல்லைமுனியப்பன் கோவில் அருகே வசிக்கும் விவசாயி தங்கராஜ் என்பவர் ஆடுகள் வளர்க்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார். இதனிடையே நேற்று மாலை வழக்கம்போல 20 ற்கும் மேற்பட்ட ஆடுகளை ஆட்டுப்பட்டியலில் அடைத்து வைத்துள்ளார்.

பின்னர் இன்று அதிகாலையில் ஆடுகள் கூச்சலிட்டதை தொடர்ந்து தங்கராஜு ஆட்டுப்பட்டிக்கு சென்று பார்த்த போது 10ற்கும் மேற்பட்ட செந்நாய்கள் ஆடுகளை கடித்து குதறிக்கொண்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்து அக்கம்பக்கத்தினர் உதவியோடு செந்நாய்களை விரட்டியடித்தனர். பின்னர் ஆட்டுப்பட்டியலில் இருந்த ஆடுகளை பார்த்தபோது 10 ற்கும் மேற்பட்ட ஆடுகள் உயிரிழந்த நிலையிலும் மற்ற ஆடுகள் கவலைக்கிடமாகவும் இருந்ததைக்கண்டு மேலும் அதிர்ச்சியடைந்தனர்.
இதுகுறித்து கால்நடை மருத்துவர், வருவாய்த்துறை மற்றும் காவல்துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்ததின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கவலைக்கிடமாகவுள்ள ஆடுகளுக்கு சிகிச்சையளித்து இச்சம்பவம் குறித்தும் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதே போல மேல் சித்தூர் பகுதியில் வசிக்கும் பழனியப்பன் என்பவருக்கு சொந்தமான ஆடுகளையும் செந்நாய்கள் கடித்து மூன்று ஆடுகள் உயிரிழந்துள்ளது. இதனிடையே சித்தூர் கிராமத்தில் செந்நாய்கள் கடித்து 15 ஆடுகள் உயிரிழந்ததோடு 10 ற்கும் மேற்பட்ட ஆடுகள் கவலைக்கிடமாகவுள்ள இச்சம்பவம் அப்பகுதி ஆடு வளர்க்கும் விவசாயிகளிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
No comments:
Post a Comment