எடப்பாடி அருகே அரசு நிலத்தில் மீண்டும் குடியேற முயற்சி பொதுமக்கள் எதிர்ப்பு. - தமிழக குரல் - சேலம்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Tuesday, 15 November 2022

எடப்பாடி அருகே அரசு நிலத்தில் மீண்டும் குடியேற முயற்சி பொதுமக்கள் எதிர்ப்பு.


எடப்பாடி நகராட்சி எல்லைக்குட்பட்ட கவுண்டம்பட்டி, சக்தி நகர், இப்பகுதியைச் சேர்ந்த பரமேஸ்வரி, மரகதம், சரசு, சின்னப்பொண்ணு உள்ளிட்டா பத்துக்கு மேற்பட்ட குடும்பத்தினர் அப்பகுதியில் உள்ள அரசு புறம்போக்கு நிலத்தில் குடியிருந்து வந்தனர். 

அப்பகுதியை ஆய்வு செய்த நகராட்சி அலுவலர்கள் மற்றும் வருவாய்த் துறையினர். சம்பந்தப்பட்ட குடும்பங்களை அரசு புறம்போக்கு நிலத்தில் இருந்து வெளியேற உத்தரவிட்டதுடன், அவர்களுக்கு அரசு சார்பில் பழைய எடப்பாடி பகுதியில் இலவச வீட்டுமனைகள் வழங்கினர். இந்நிலையில் அரசு உத்தரவை ஏற்று சக்தி நகர் அருகில் உள்ள புறம்போக்கு நிலத்தில் குடியிருந்தவர்கள், அரசு ஒதுக்கீடு செய்த புதிய மனை பிரிவில் அண்மையில் குடியேறினர். 


இந்நிலையில் திடீரென சக்தி நகர் பகுதியில் உள்ள அரசு புறம்போக்கு நிலத்தில் ஏற்கனவே கட்டப்பட்ட வீடுகளை புதுப்பித்து, மீண்டும் அவர்கள் குடியேற முயன்றதை அடுத்து அப்பகுதி பொதுமக்கள் தங்களுக்கு வழித்தடை பிரச்சனை இருப்பதாக கூறி, சம்மந்தப்பட்டவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் அப்பகுதியில் உள்ள சாலையில் தடைகளை ஏற்படுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனை அறிந்து எடப்பாடி காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இரு பிரிவினர்களையும் சமாதானம் செய்யும் முயற்சியில் ஈடுபட்டனர். 


நகராட்சி அலுவலர்கள் மற்றும் காவல் துறையினர் முன்னிலையில் சமாதான பேச்சு வார்த்தை நடைபெற்றது. தொடர்ந்து அரசு புறம்போக்கு நிலத்தில் குடியிருந்தவர்கள் அங்கு மீண்டும் குடி ஏறக்கூடாது எனவும், அரசு ஒதுக்கீடு செய்த புதிய நிலத்தில் தொடர்ந்து வசிக்கும் படியும் அறிவுறுத்தப்பட்டு அங்கிருந்து அவர்கள் அனுப்பி வைக்கப்பட்டனர். அரசு நிலத்தில் குடியிருப்பு வாசிகள் மீண்டும் குடியேற முயன்ற நிகழ்வால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் ஏற்பட்டது.


- சேலம் மாவட்ட செய்தியாளர் எடப்பாடி லிங்கானந்த்.

No comments:

Post a Comment

Post Top Ad