இதைத்தொடர்ந்து பெரியார் பல்கலைக்கழக தொழிலாளர் சங்கத்தின் சட்ட ஆலோசகரும், முன்னாள் பேராசிரியர் இளங்கோவன் சேலம் மாநகர காவல் ஆணையாளருக்கு புகார் அனுப்பியுள்ளார். அதில் பெரியார் பல்கலைக்கழகத்தில் பல்வேறு முறைகேடுகள் நடந்து வருகிறது. பல்கலைக்கழக நிர்வாகம் சரிவர இயங்கவில்லை. சிண்டிகேட் அனுமதி இல்லாமல் துணைவேந்தர் சமீபத்தில் தொடங்கிய நிறுவனத்தில்.பெரியார் பல்கலைக்கழகத்தின் நிதியை முதலீடு செய்துள்ளார். இதனால் பல்கலைக்கழகத்திற்கு பெரும் நிதி இழப்பு ஏற்பட்டுள்ளது. இது குறித்து அவரிடம் கேட்டபோது சாதி ரீதியாகவும், ஆபாசமாகவும் திட்டி கொலை மிரட்டல் விடுத்தார். எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகாரில் தெரிவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இதன் அடிப்படையில் நேற்று மாலை பெரியார் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் ஜெகநாதன் கருப்பூர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். அவர் மீது ஆபாசமாக பேசுதல், கொலை மிரட்டல் விடுதல், கூட்டு சதி செய்தல், மோசடி செய்தல், ஆவணங்களை போலியாக தயாரித்தல், அரசு ஊழியராக இருந்து கொண்டு ஏமாற்றுதல், குற்றம் செய்ய முயற்சி செய்தல் மற்றும் வன்கொடுமை தடுப்பு சட்டம் ஆகிய எட்டு பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில் பெரியார் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் ஜெகன்நாதனை கைது செய்த கருப்பூர் காவல்துறையினர் அவரிடம் 6 மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை நடத்தினர். பின்னர் இரவு சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனையில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. பரிசோதனைக்கு பிறகு நள்ளிரவு 12.30 மணிக்கு சேலம் இரண்டாவது நீதித்துறை நடுவர் தினேஷ்குமார் வீட்டில் ஆஜர் படுத்தி சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
பின்னர், ஜெகநாதன் சொந்த ஜாமின் கூறியுள்ளார். அதன் பேரில் பெரியார் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் ஜெகநாதன் ஏழு நாட்கள் சேலம் மாநகர் சூரமங்கலம் உதவி காவல் ஆணையர் அலுவலகத்தில் கையெழுத்திட வேண்டும் என்றும், காவல்துறையினர் விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று நிபந்தனை ஜாமின் அடிப்படையில் விடுவிப்பதாக நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
இதற்கிடையே துணைவேந்தர் ஜகன்நாதன் மீது சேலம் மத்திய குற்றப்பிரிவில் புகார்கள் இருப்பதாக கூறப்படுகிறது. இது தொடர்பாகவும் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். அதன் மீதும் சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் ஜெகநாதன் மீது வழக்கு பதிவு செய்ய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. பெரியார் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் கைது செய்யப்பட்ட சம்பவம் உயர்கல்வித்துறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது..
No comments:
Post a Comment