கருமந்துறை அரசு தோட்டக்கலைப் பண்ணை மூலம் கடந்த 3 ஆண்டுகளில் 22,489 விவசாயிகளுக்கு 11.18 இலட்சம் கன்றுகள் வழங்கப்பட்டுள்ளன - தமிழக குரல் - சேலம்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Sunday, 15 December 2024

கருமந்துறை அரசு தோட்டக்கலைப் பண்ணை மூலம் கடந்த 3 ஆண்டுகளில் 22,489 விவசாயிகளுக்கு 11.18 இலட்சம் கன்றுகள் வழங்கப்பட்டுள்ளன



சேலம் மாவட்டம், கருமந்துறை அரசு தோட்டக்கலைப் பண்ணையில் உற்பத்தி செய்து வரும் பழச்செடிகளின் இரகம் மற்றும் தரம் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் இரா. பிருந்தாதேவி. இ.ஆ.ப., அவர்கள் "நிறைந்தது மனம்" திட்டத்தின் கீழ் ஆய்வு மேற்கொண்டு தெரிவித்ததாவது:

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் விவசாயிகளின் பொருளாதார மேம்பாட்டிற்காக பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறார்கள். தோட்டக்கலைத்துறையின் மூலம் 1981-1982-ஆம் ஆண்டு மாபெரும் பழப்பண்ணை கருமந்துறையில் துவங்கப்பட்டது. கருமந்துறை அரசு தோட்டக்கலைப் பண்ணையானது சேலத்தில் இருந்து சுமார் 65 கி.மீ தொலைவில் கல்வராயன் மலையில் 1,037 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. இதில் 482 ஏக்கரில் மா பழந்தோட்டமும், மீதமுள்ளவற்றில் கொய்யா, சப்போட்டா, எலுமிச்சை மற்றும் பலா உள்ளது. இப்பண்ணையில் 60 தொழிலாளர்கள் பணியாற்றுவதன் மூலம் 60 குடும்பங்களுக்கு இப்பண்ணை வாழ்வாதாரமாக திகழ்ந்து வருகிறது.

கருமந்துறை அரசு தோட்டக்கலைப் பண்ணையில் ஆண்டுதோறும் 1,50,000 எண்ணிக்கையிலான அல்போன்சா, இமாம்பசந்த், பங்கனப்பள்ளி, மல்கோவா உள்ளிட்ட மா ஒட்டு செடிகளும், 8,000 எண்ணிக்கையிலான L49. அர்கா கிரன் உள்ளிட்ட கொய்யா பதியன்களும், 20,000 எண்ணிக்கையிலான NA7, கிருஷ்ணா, காஞ்சன் உள்ளிட்ட நெல்லி பதியன்களும், 12,000 எண்ணிக்கையிலான PKM1 ரக சப்போட்டா ஒட்டுகளும், 4,000 எண்ணிக்கையிலான எலுமிச்சை பதியன்களும், 1,50,000 எண்ணிக்கையிலான உள்ளூர் பாக்கு பயிர்களும், 20,000 எண்ணிக்கையிலான உள்ளூர் நெட்டை ரக தென்னை கன்றுகளும், 10,000 எண்ணிக்கையிலான மருத்துவச் செடிகள், 15,000 எண்ணிக்கையிலான அழகு செடிகள் என மொத்தம் ரூ.1.75 கோடி மதிப்பிலான செடிகள் உற்பத்தி செய்யப்பட்டு விவசாயிகளுக்கு நேரடி விற்பனை மூலமாகவும், திட்ட மானியத்துடனும் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.மேலும் இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்கும் வகையில் அங்கக இடுபொருட்களான மண்புழு உரம், பஞ்சகாவ்யம், தசகாவ்யம் மற்றும் மண்புழு குவியல் நீர் உற்பத்தி செய்யப்பட்டு விநியோகம் செய்யப்படுகிறது. அதேபோன்று, பள்ளி மாணவர்களுக்கான பண்ணை சுற்றுலாவில் வீட்டுக்காய்கறி தோட்டம். ஒட்டு, பதியன் குறித்த பயிற்சிகள், ஆடு, மாடு. பறவைகள் பராமரித்தல் குறித்த பயிற்சிகள் கொடுக்கப்பட்டு வருகிறது. விவசாயிகளுக்கு ஒட்டு, பதியன். தேனீ வளர்ப்பு பயிற்சிகள் வழங்கப்பட்டு முன்மாதிரி பண்ணையாக செயல்பட்டு வருகிறது.

கருமந்துறை அரசு தோட்டக்கலைப் பண்ணையில் ஆய்வு மேற்கொண்டு, மா, கொய்யா, எலுமிச்சை, பப்பாளி, சப்போட்டா உள்ளிட்ட நடவுச் செடிகளை உற்பத்தி செய்து விவசாயிகளுக்கு நியாயமான விலையில் வழங்கப்பட்டு வருவது குறித்தும், எலுமிச்சை புல் வகைகள் மற்றும் யூகலிப்டஸ் இலைகளிலிருந்து எண்ணெய் தயாரிக்கும் பணிகள் குறித்தும் நேரில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

2021-22-ஆம் ஆண்டில் 7,100 விவசாயிகளுக்கு 3,57,733 கன்றுகளும், 2022-23-ஆம் ஆண்டில் 7,296 விவசாயிகளுக்கு 3,69,100 கன்றுகளும், 2023- 24-ஆம் ஆண்டில் 5,223 விவசாயிகளுக்கு 2,61,277 கன்றுகளும், 2024-25- ஆம் ஆண்டில் 2.870 விவசாயிகளுக்கு 1.29,800 கன்றுகளும் என மொத்தம் கடந்த 3 # ஆண்டுகளில் 22,489 விவசாயிகளுக்கு 11,17,910 கன்றுகள் வழங்கப்பட்டுள்ளது. அரசு தோட்டக்கலை பண்ணைகள் மூலம் உற்பத்தி செய்யப்படும் செடிகள் மற்றும் இயற்கை இடு பொருட்களை விவசாயிகள் குறைந்த விலையில் தரமுள்ளதாக பெற்று பயன் பெறலாம். இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.இரா.பிருந்தாதேவி. இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்தார்..

No comments:

Post a Comment

Post Top Ad