எடப்பாடி அருகே 40 ஆண்டுகளுக்குப் பிறகு நிரம்பி வழியும் ஏரி விவசாயிகள் மகிழ்ச்சி. - தமிழக குரல் - சேலம்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Wednesday, 19 October 2022

எடப்பாடி அருகே 40 ஆண்டுகளுக்குப் பிறகு நிரம்பி வழியும் ஏரி விவசாயிகள் மகிழ்ச்சி.

எடப்பாடி அடுத்த ஆவணிப்பேரூர் மேல்முகம் ஊராட்சி பகுதியில் உள்ள குண்டியாம்பட்டி ஏரி 40 ஆண்டுகளுக்குப் பிறகு நிரம்பி வழிந்து வரும் நிலையில், அப்பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

சேலம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தொடர் கனமழை பெய்து வரும் நிலையில், சேர்வராயன் மலைத்தொடரில் இருந்து உருவாகும் சரபங்கா நதியில் தற்போது வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் சரபங்கா நதியில் இருந்து வெளியேறும் உபரி நீர், எடப்பாடி அடுத்த வேப்பம்பட்டி பகுதியில் உள்ள ஏரியில் நிறைந்து, அங்கிருந்து உபரி நீர் கால்வாய்கள் வழியாக வெளியேறும் நீர் அருகில் உள்ள சின்னேரி மற்றும் குண்டியாம்பட்டி ஏரிகளில் நிரம்பி வருகிறது. 


தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வந்த நிலையில்  சுமார் 120 ஏக்கர் பரப்பளவு உள்ள குண்டியாம்பட்டி ஏரி கடந்த சில தினங்களாக தனது முழு கொள்ளளவை எட்டி நிரம்பி வழிய தொடங்கியுள்ளது. சுமார் 40 ஆண்டுகளாக வறண்டு கிடந்த இந்த ஏரி தற்போது நீர் நிறைந்து நிரம்பி வழிவதை அப்பகுதி மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து செல்கின்றனர். 


மேலும் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த ஏரியின் மூலம் அருகில்  உள்ள  நாச்சிபாளையம், சவுரி பாளையம், வெத்தலகாரன் காடு, வெள்ள நாயக்கன்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள விவசாய நிலங்கள் மீண்டும் பாசன வசதி பெறும் எனவும், ஏரி நிரம்பி வழிவதால் இப்பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் கணிசமாக உயர வாய்ப்புள்ளதாக அப்பகுதி விவசாயிகள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.


-தமிழக குரல் செய்திகளுக்காக  மாவட்ட தலைமை செய்தியாளர் எடப்பாடி லிங்கானந்த்.

No comments:

Post a Comment

Post Top Ad