எடப்பாடி அடுத்த பூலாம்பட்டி பகுதியில் காவிரி ஆற்றின் குறுக்கே கதவணை கட்டப்பட்டு அதன் வாயிலாக மின் உற்பத்தி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கதவணை நீர்தேக்க பரப்பில், சேலம் மாவட்டத்தின் எல்லையான பூலாம்பட்டி மற்றும் மறுகரையில் உள்ள ஈரோடு மாவட்டம், நெருஞ்சிப்பேட்டை பகுதியை இணைக்கும் வகையில் விசைப்படகு போக்குவரத்து நடைபெற்று வருகிறது.
இரு மாவட்டங்களையும் சேர்ந்த பொதுமக்கள் மற்றும் பள்ளி,கல்லூரி மாணவர்கள், அரசு அலுவலர்கள் உள்ளிட்டோர் அதிக எண்ணிக்கையில் விசைப்படகு போக்குவரத்தினை பயன்படுத்தி வருகின்றனர்.காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில், பயணிகளின் பாதுகாப்பினை கருதி மாவட்ட நிர்வாகம் விசைப்படகு போக்குவரத்தினை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது.
பூலாம்பட்டி மற்றும் காவிரிக் கரையோர பகுதியில், பேரூராட்சி செயல் அலுவலர் ஜீவானந்தம் தலைமையிலான ஊழியர்கள் அப்பகுதியில் முகாமிட்டு பொதுமக்களுக்கு ஒலிபெருக்கி மூலம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்து வருகின்றனர்.பூலாம்பட்டி பகுதியில் விசைப்படகு போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ள நிலையில், இதனால் பயணிகள் சுமார் பத்து கிலோமீட்டர் தூரம் பயணம் செய்து மாற்று பாதையில் மறுகரைக்கு சென்று வருகின்றனர்.
No comments:
Post a Comment