எடப்பாடி அருகே கோவிலில் சிலை அமைப்பது தொடர்பாக இரு தரப்பினரிடையே போட்டி; பதற்றம். - தமிழக குரல் - சேலம்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Saturday, 21 January 2023

எடப்பாடி அருகே கோவிலில் சிலை அமைப்பது தொடர்பாக இரு தரப்பினரிடையே போட்டி; பதற்றம்.


எடப்பாடி அருகே கோவிலில் சிலை அமைப்பது தொடர்பாக இரு தரப்பினரிடையே போட்டி ஏற்பட்டுள்ள நிலையில், மோதலை தடுக்கும் விதமாக அப்பகுதியில் கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் வருவாய்த் துறையினர் சமாதான முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.


எடப்பாடி ஒன்றியத்துக்கு உட்பட்ட வெள்ளரிவெள்ளி ஊராட்சி, வேட்டுவபட்டி கிராமம் இப்பகுதியில் பிரசித்தி பெற்ற மகா மாரியம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. மிகவும் பழமை வாய்ந்த  இக்கோவிலை புதுப்பிக்கும் பணி கடந்த ஆண்டு தொடங்கியது. 

இந்நிலையில் கோவிலை புனரமைக்கும் பணியில் நிதி முறைகேடு செய்ததாக கூறி ஒரு சிலரை ஊர் மக்கள் திருப்பணி குழுவில் இருந்து விலக்கி வைத்ததாக கூறப்படுகிறது.  சம்பந்தப்பட்ட கோவிலின் புனரமைப்பு பணிகள் முழுவதுமாக நிறைவடைந்த நிலையில், கோவில் கருவறையில் நிறுவுவதற்கான அம்மன் சிலை அமைக்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. மகா மாரியம்மன் கோவில்  கருவறைக்குள் அமைவதற்கான அம்மன் சிலைகளை இரு தரப்பினரும் தனித்தனியாக ஏற்பாடு செய்து கோவிலில் நிறுவும் முயற்சியில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது. 

இதனால் அப்பகுதியில் பதட்டமான சூழல் ஏற்பட்டது. சம்பந்தப்பட்ட கோவிலில் சிலை நிறுவுவதற்காக ஊர்வலமாக வந்த ஒரு தரப்பினரை தடுத்து நிறுத்திய போலீசார் தற்போது கோவிலில் சிலை அமைப்பது குறித்து கோட்டாட்சியர் விசாரணைக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாகவும், விசாரணை முடிவிலேயே சிலை நிறுவுவதற்கு அனுமதி அளிக்கப்படும் எனவும் அதுவரை இரு தரப்பினரும் காவல்துறை கட்டுப்பாட்டில் உள்ள  கோவில் பகுதியில் அத்து மீறி நுழைந்து சிலைகளை நிறுவ முற்படக்கூடாது என அறிவுறுத்தி அங்கிருந்து அவர்களை அனுப்பி வைத்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.


- மாவட்ட செய்தியாளர்  எடப்பாடி லிங்கானந்த்.

No comments:

Post a Comment

Post Top Ad