2024 மக்களவை தேர்தலையொட்டி, தேர்தல் அறிக்கை தயாரிப்பதற்காக தி.மு.க. துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி கருணாநிதி எம்.பி. தலைமையில் 11 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலினின் அறிவுரைப்படி இக்குழு பிப்ரவரி 5 ஆம் தேதி முதல், தமிழ்நாட்டின் முக்கிய நகரங்களுக்கு சென்று மக்களை நேரில் சந்தித்து பரிந்துரைகளை பெறும் பணியை தொடங்கி உள்ளது. உரிமைகளை மீட்க ஸ்டாலினின் குரல் - நாடாளுமன்றத்தில் ஒலித்திட வேண்டிய தமிழ்நாட்டின் கருத்துகள் என்ற தலைப்பில், பல்வேறு தரப்பினரின் கருத்துக்களை கேட்டு வருகிறது.
திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு இன்று (11/02/2024) சேலம் மாவட்டத்தில் மக்களை சந்தித்தனர். சேலத்தில் அமைந்துள்ள ஹோட்டல் சென்னிஸ் கேட்வே- இல் வைத்து திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி கருணாநிதி எம்.பி தேர்தல் அறிக்கையில் இடம்பெற வேண்டிய பொதுமக்களின் கோரிக்கைகளை வாங்கினர். அதில் சேலம், நாமக்கல், கள்ளக்குறிச்சி மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் பங்கேற்றனர்.
திமுக விவசாய அணிச் செயலாளர் ஏ.கே.எஸ்.விஜயன், திமுக வர்த்தகர் அணி துணைத் தலைவர் கோவி.செழியன், கே.ஆர்.என்.ராஜேஸ்குமார் எம்.பி., திமுக மாணவரணிச் செயலாளர் சி.வி.எம்.பி.எழிலரசன் எம்.எல்.ஏ., திமுக அயலக அணிச் செயலாளர் எம்.எம்.அப்துல்லா எம்.பி., திமுக மருத்துவ அணிச் செயலாளர் மருத்துவர் எழிலன் நாகநாதன் எம்.எல்.ஏ., சென்னை மாநகர மேயர் பிரியா ஆகியோர் பரிந்துரைகளை மக்களிடமிருந்து பெற்றனர்.
சேலம் கிழக்கு மாவட்டச்செயலாளர் சிவலிங்கம், சேலம் மத்திய மாவட்டச்செயலாளர் இராஜேந்திரன், மக்கள் பிரதிநிதிகள், திமுக நிர்வாகிகள் பங்கேற்றனர்.
கொலுசு உற்பத்தியாளர் சங்கங்கள், லாரி உரிமையாளர்கள், வணிகர் சங்கங்கள், விவசாயிகள், மாற்றுத்திறனாளிகள், மக்கள் நலச்சங்கங்கள், செவிலியர்கள், தொழில் முனைவோர், பல்வேறு அமைப்புகளைச்சேர்ந்தவர்கள், அரசு ஊழியர்களின் பிரதிநிதிகள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரும் தேர்தல் அறிக்கையில் இடம்பெற வேண்டிய அம்சங்கள் குறித்த பரிந்துரையை ஆர்வமுடன் வழங்கினர்.
No comments:
Post a Comment