பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்த மாதாந்திர ஆய்வு கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் இரா. பிருந்தாதேவி, இ.ஆ.ப.. அவர்கள் தலைமையில் இன்று (13.12.2024) மாவட்ட ஆட்சியரகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்குப்பின். மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது:
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் மாவட்ட ஆட்சித்தலைவர்கள் மற்றும் காவல்துறை அலுவலர்களுக்கான மாநாட்டில் தெரிவித்ததற்கிணங்க "பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக நடைபெறும் எந்த வகையான வன்முறையும் அரசு பொறுத்து கொள்ளாது எனவும், இவர்களுக்கு எதிரான குற்றச் செயல்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்" என அறிவுறுத்தியுள்ளார்கள்.
அந்த வகையில் காவல்துறை. மாவட்ட சமூக நலத்துறை. மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவானது மாதந்தோறும் மாவட்டத்தில் பெறப்பட்ட பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்தும், அதன்மீது உடனடியாக மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான உதவி சேவை மையம் சேலம் மாவட்ட ஆட்சியரகத்தில் அறை எண்-120ல் 24 மணி நேரமும் செயல்பட்டு வருகிறது. மேலும், குழந்தை உதவி மையம் புறத்தொடர்பு பணிகள் சேலம் பதிய பேருந்து நிலையத்திலும் செயல்பட்டு வருகிறது. இது தவிர 1098 என்ற எண்ணில் குழந்தைகளுக்கு எதிரான குற்ற செயல்கள் குறித்த புகார்களை வழங்கிட தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில், கடந்த நவம்பர் -2024 குழந்தைகள் உதவி மையத்திற்கு 204 அழைப்புகள் மற்றும் சந்திப்புகள் வரப்பெற்று அதன் மீது உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. பெறப்பட்ட அழைப்புகளில் 85 அழைப்புகள் குழந்தைகள்நலக்குழு மூலம் விசாரிக்கப்பட்டு தேவையான மறுவாழ்வு வசதிகள் அவர்களுக்கு செய்து கொடுக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 119 அழைப்புகளுக்கு தொடர்புடைய அலுவலர்கள் உடனடியாக நேரில் சென்று, குழந்தைகளை சந்தித்து பிரச்சனைகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது.
மேலும், நவம்பர் 2024 குழந்தை திருமணம் தொடர்பாக மாவட்ட அளவில் 27 புகார்கள் வரப்பெற்றது. இதன் மீது உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, 6 திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டு, இதில் ஈடுபட்ட தொடர்புடையவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் வரபெற்ற அழைப்புகளில் 14 அழைப்புகள் குழந்தைகள் திருமணங்கள் என தவறான தகவல் என நேரடி ஆய்வில் அறியப்பட்டுள்ளது. 7 புகார்கள் பிற மாவட்டம் சார்ந்தவைகள் என்பதால் நடவடிக்கைக்காக தொடர்புடைய மாவட்டங்களுக்கு புகார்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, மாவட்டத்தில் குழந்தைகள் திருமணம் தொடர்பாக வரப்பெற்ற அனைத்து புகார்களுக்கும் குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம், மாவட்ட சமூக நலத்துறை, காவல்துறை, தன்னார்வ தொண்டு நிறுவனங்களுடன் ஒருங்கிணைந்து நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றச் செயல்களில் ஈடுபடுவோர்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது. இப்பணிகளை அலுவலர்கள் தொடர்ந்து கண்காணித்து ஒவ்வொரு மாதமும் மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் நிலை குறித்து அறிக்கை அளித்திட அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் இரா. பிருந்தாதேவி, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்தார்.
இக்கூட்டத்தில் மாவட்ட சமூக நல அலுவலர் திருமதி.ரெ.கார்த்திகா, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் திரு.சி.முரளி உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களை சார்ந்த நிர்வாகிகள் கலந்துகொண்டனர்..
No comments:
Post a Comment